வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸார் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 32 லீட்டர் பெற்றோல் மீட்கப்பட்டது.
அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபர் கைதான நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் குறித்த வழக்கு இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















