-சஜித் பிரேமதாச கவலை-
நமது நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன் ஜே.வி.பியின் நிலைப்பாடாக இருந்தது. இன்று அரசாங்கம் இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவிப்புச் செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
முன்பு மின்சார சபையின் 23,000 தொழிலாளர்களை வீதிகளுக்கு இறக்கி மின்சார சபையில் கைவைக்க விட மாட்டோம் என்று மக்களை ஏமாற்றி, இன்று அரச அதிகாரத்தை கைப்பற்றி மின்சார சபையை பல நிறுவனங்களாக பிரித்து வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் சீர்திருத்தமும் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் இந்நிறுவனத்தை இல்லாதொழிக்க மக்கள் இடமளிக்கவில்லை. தேசிய நிறுவனங்களை பாதுகாக்கவே மக்கள் இடமளித்தனர்.
நாட்டின் மின்சக்தித் துறை தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதிக்கிறது என்பதால், இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இதை விட அதிக சிந்தனையுடனும் பொறுப்புணர்வுடனும் மற்றும் வகைகூறலுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த மறுசீரமைப்புகளை தொழிலாளர்களுடன் கலந்தாலோசித்து அவர்களினது வேலைவாய்ப்பைப் பாதுகாத்துக்கொண்டு முன்னெடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை அழித்த இந்த அரசாங்கம் இப்போது மின்சார சபையையும் நாசமாக்கியுள்ளது என்றார்.


















