-நோயாளர்கள் கடும் விசனம்-
-சப்தசங்கரி-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் காணப்படும் மலசலகூடங்கள் கதவுகள் இல்லாத நிலை காணப்படுவதால், அங்கு விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
இவ்விடயம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும், அவர்கள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று குறித்த வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வைத்தியசாலையின் 2 ஆம் நோயாளர் விடுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவில் உள்ள பெண்கள் மலசல கூடத்தை பயன்படுத்த வேண்டும் எனில் மறைப்புக்களை நோயாளர்களே எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.
அங்குள்ள மலசலகூடங்கள் இவ்வாறான நிலையில் காணப்படுவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி மக்களுடைய சுகாதார தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


















