-பி.டிலக்ஷன்-
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடு நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி விடுவிப்பதில் தாமதம் நிலவிவருகின்றது.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 56 நாட்களைக் கொண்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடே நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் சமர்பிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த பாதீட்டுக்கான ஒப்புதல் இன்னமும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரணித்தாவிடம் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான பாதீட்டின் முன்னேற்றம் தொடர்பில் வினாவப்பட்டது.
இதன்போது, சட்டத்தரணி ஞா.ரணித்தா கருத்து தெரிவிக்கையில், பாதீடு ஒதுக்கீடு சம்பந்தமாகவும் அது தொடர்பான அனுமதி தொடர்பாகவும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் சட்டவைத்திய அதிகாரியை பின்தொடர்ந்து கண்காணிப்புச் செய்து அதொடர்பில் மன்றுக்கு அறிக்கையிடுமாறு கட்டளையிடப்பட்டது, என்றார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற செம்மணி வழக்கு விசாரணயின் போது சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் முன்றாம் கட்ட அகழ்வுகளுக்கான எட்டு வாரங்களுக்கான பாதீடு நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நீதி அமைச்சினால் நிதி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் வருட இறுதியில் ஏற்பட்ட மழையுடனான காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகள் தாமதமானமையினால் ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















