-பி.டிலக்ஷன்-
செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ந்தும் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதால் மீளவும் கழிவு நீர் பவுசர் மூலம் குழிக்குள் இருந்த வெள்ள நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டு அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற பருவப்பெயர்சி மழையினால் செம்மணி மனிதப் புதைகுழியின் தடவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றின் குழியில் வெள்ளநீர் நிரம்பி காணப்பட்ட நிலையில் நல்லூர் பிரதேச சபையினுடைய உதவியுடன் வெள்ள நீரினை அகற்றும் நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான மூவாயிரம் லீட்டர் கொள்வனவுள்ள கழிவு நீர் பவுசர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஐந்தாயிரம் லீட்டர் கொள்வனவுள்ள கழிவு நீர் பவுசர் மூலம் குழிக்குள் இருந்த சுமார் 91000 லீட்டர் வெள்ள நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்ற ப்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் நீதவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்டவைத்திய அதிகாரி, நல்லூர் பிரதேச சபை செயலாளர் உள்ளடங்கலான குழுவினர் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தனர்.
இதன்போது செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுத் தளம் ஒன்றின் குழியில் வெள்ள நீர் தொடர்ந்தும் தேங்கியிருப்பது அவதானிக்கப்பட்டது. குறித்த வெள்ள நீரினை வெளியேற்றுகின்ற செயற்பாடுகளை எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி மேற்கொள்வது எனவும் அதன் பின்னர் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.


















