மிதிகம பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைத் தாக்கித் துன்புறுத்தியதன் மூலம் மதுவரி திணைக்களத்தின் 7 அதிகாரிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் 7 பேரும் தலா 75,000 ரூபா வீதம் தமது பணத்திலிருந்து 5,25,000 ரூபா நஷ்டஈட்டை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நஷ்டஈட்டுத் தொகையை, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி, தனது உணவகத்திற்கு வெளியே ஏதோ சலசலப்பு ஏற்படுவது கேட்டதாகவும், அதற்கமைய நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஊஊவுஏ கமராக்களைப் பரிசோதித்ததாகவும் மனுதாரர் தெரிவித்தார். இதன்போது, பிரதிவாதிகளில் சிலர் தனது ஊழியர்களைத் தாக்கும் காட்சியைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் தனது நிறுவனத்திற்குள் புகுந்த அந்த அதிகாரிகள், தாம் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு, தடிகளால் தம்மைத் தாக்கியதாகவும், பின்னர் பெட்சீட் ஒன்றால் கண்களைக் கட்டித் தாக்கியதுடன், மதுபானப் போத்தல்கள் குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இந்தச் செயலின் மூலம் பிரதிவாதிகளான மதுவரி திணைக்கள அதிகாரிகள் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என ஏகமனதாகத் தீர்ப்பளித்தது.


















