-முஜிபுர் ரஹ்மான் சாடல்-
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு கறுப்புச்சந்தை வியாபாரியைப் போலவே செயற்படுவதாகக் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கடுமையாக விமர்சித்தார்.
எதுல்கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வதற்கு முன்னரே இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பழைய கையிருப்புகளை, தற்போதைய விலை ஏற்றத்தைக் காட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வது ஒரு பாரிய குற்றமாகும்.
எரிபொருள் விலை அதிகரிப்பானது நாட்டின் பணவீக்கத்தை உயர்த்துவதோடு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் பாரியளவில் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மின் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத சாதாரண மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையையும் அரசாங்கம் அதிகரித்துள்ளமை கண்டிக்கத்தக்கது.
எரிபொருள் கையிருப்பு போதியளவு இருப்பதாகவும், விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்த போதிலும், தற்போது அதற்கு மாறாக அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இலங்கை செய்திகள்
எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒரு கொள்கையைப் பின்பற்றிய ஜனாதிபதி, தற்போது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கேள்விகளையே பதிலாகக் கேட்கும் ‘பிளாட்’ நியதியைப் பின்பற்றி உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கப் பார்க்கிறார் என்றும் அவர் சாடினார்.


















