-பிரதமர் ஹரிணி அமரசூரிய-
முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும், அதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், ஒழுங்குமுறை அதிகாரசபையொன்றின் ஊடாக முன்பள்ளிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அம்பலாந்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான, ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
எமது கல்வி மறுசீரமைப்புக் கொள்கையிலேயே முன்பள்ளிக் கல்வியை மறுசீரமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவரையான காலப்பகுதியில் முன்பள்ளிகளை ஆரம்பித்தல் மற்றும் ஆரம்ப சிறுவர் பருவ அபிவிருத்தி நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஆகையினால், அனைத்து முன்பள்ளிகளையும் ஒழுங்குபடுத்தவும் தரப்படுத்தவும் வேண்டியுள்ளது. இது எளிதான காரியமல்ல.
எனவே, முதலில் அனைத்து முன்பள்ளிகளும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிக்காக ஏற்கனவே ஒரு பாடத்திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம்.
2027இல் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான நிர்வாகக் கட்டமைப்பொன்றின் மூலம் முன்பள்ளிகளை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முன்பள்ளி டிப்ளோமாவுக்காக அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை இதன் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறைத் தகைமைகளை வளர்க்கவும், அவர்களை ஒரு முறையான சம்பளப் படிமுறைக்குள் உள்வாங்கவும் நாம் படிப்படியாக நடவடிக்கை எடுப்போம்.
முன்பள்ளிகள் மாகாண சபைகளுக்கும் பிரதேச சபைகளுக்கும் உட்பட்டவை என்பதால், விடயப்பரப்பிற்குப் பொறுப்பான அமைச்சு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்.
எனவே, முன்பள்ளி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கக் கட்டமைப்புக்குழுக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் ஊடாகத் திட்டமிட்டுச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


















