-த.அம்பிகாவதி-
கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நெல் சுத்தப்படுத்தும் மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்,
1970களில் வடமாகாண கூட்டுறவுத்துறை இலங்கையில் கொடிகட்டிப் பறந்தது. எனினும் சில சங்கங்களின் நிர்வாகங்கள் நேர்மையாகச் செயற்படாமையினால் அத்துறை பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
நிதி ஆணைக்குழுவின் புதிய அறிவுறுத்தல்களுக்கு அமைய கூட்டுறவுதுறைக்கு எதிர்காலத்தில் மாகாணம் மட்டத்தின் ஊடான திட்டங்களை மானியமாகவோ அல்லது கொடையாகவோ வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. இருந்த போதிலும் வடக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்டது என்பதால், எமது நியாயப்பாடுகளை முன்வைத்து சில விசேட திட்டங்களுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம் என்றார்.


















