-உறுப்பினர் க.கஜிதன்-
-த.சுபேசன்-
சாவகச்சேரி நகரசபையினுடைய அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்களின் சபை விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் அந்தந்த கிராம மக்களுடைய நலன் சம்பந்தப்பட்டவை. எனவே சபை எல்லைக்குட்பட்ட மக்களும் அதனை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கையை சபையில் முன்வைத்த நிலையில் அதற்கு சாதகமாக பதிலும் கிடைத்துள்ளது.
எனவே சாவகச்சேரி நகரசபையினுடைய மாதாந்த அமர்வுகளை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் முன்கூட்டியே அதற்கான அனுமதியைப் பெற்று உரிய முறையில் சபை அமர்வைப் பார்வையிட முடியும்.
இதனூடாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபை மக்களுக்கு தமது செயற்பாடுகளை வெளிப்படுத்த முடியுமென்பதுடன் சபையின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை பேணப்படும் என்றார்.

















