கனடாவின் பிராம்ப்டன் நகரில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக்கு ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், இந்த நினைவுச் சின்னம் சமூக விரோதிகளால் சிதைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நினைவுத்தூபி என்பது வெறும் சிலையல்ல, மாறாக இனப்படுகொலையில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களின் நினைவாகவும், கனடாவைத் தமது தாயகமாகக் கொண்ட தப்பிப்பிழைத்தவர்களின் ஆற்றுப்படுதலுக்கான ஒரு புனிதத் தலமாகவும் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கனடியத் தமிழர் தேசிய அவையும் முன்னதாக இந்த சம்பவத்துக்கு தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
கடந்த 20 ஆம் திகதி அதிகாலை வேளையில், சின்குவாசி பூங்காவில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தின் பிரதான மேடை மற்றும் மூன்று பலகைகளில் வர்ணங்கள் பூசப்பட்டதுடன், மேலும் இரண்டு பலகைகள் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்லவென்றும், 2025 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில், இது தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு மறுப்பவர்களின் தொடர்ச்சியான செயல் என்றும் அந்த அமைப்பு விமர்சித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் மற்றும் இதன் பின்னணியில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புடைய சக்திகளின் தலையீடுகள் இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
எனவே, கண்காணிப்புக் கெமரா பதிவுகளின் அடிப்படையில் பீல் பிராந்திய காவல்துறை மற்றும் பிராம்ப்டன் மாநகர சபை இணைந்து முறையான விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கனடியத் தமிழர் தேசிய அவை வலியுறுத்தியுள்ளது.


















