தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் பங்கேற்ற வடகிழக்கு ஆயர் மன்றத்தின் விசேட அமர்வு கடந்த 18 ஆம் திகதி வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு. தமிழ் மக்களின் நீண்டகால நலன் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுவான இணக்கப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுத்தல்.
மன்றத்தின் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்து விரிவான மீளாய்வு செய்யப்பட்டதுடன், தற்போதைய அரசியல் சூழலில் மேற்கொள்ள வேண்டிய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்துடன் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மறைமாவட்டங்களின் குருமுதல்வர்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த இக்கட்டான சூழலில், மதத் தலைவர்களின் இந்த ஒன்றிணைப்பு முயற்சி அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


















