பொலன்னறுவை – சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.
இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் இருந்து ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு சோமாவதிய புனித பூமியை நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது.
விபத்தின் போது பேருந்தில் 24 பேர் பயணித்தனர்.
பேருந்திற்குள் சிக்கியிருந்தவர்களை கந்தகாடு இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் புலஸ்திபுர பொலிஸார் இணைந்து மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
காயமடைந்தவர்களில் 8 பேர் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையிலும், ஏனைய நால்வர் புலஸ்திபுர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் புலஸ்திபுர பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


















