-200 மில்லியன் உடன் விடுவிப்பு – ADB இணக்கம்-
மத்திய கிழக்கு மோதல் சூழலுக்கு மத்தியில் இலங்கைக்கு ஒதுக்கீடு செய்திருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலராக அதிகர்த்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, 200 மில்லியன் டொலரை உடன் விடுவிக்க இணங்கியுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்டோ கந்தா தலைமையிலான தூதுக்குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையே நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது இது தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இக்கூட்டத்தின் போது, நாட்டின் பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பேரிடருக்கு பிந்தைய சூழல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலைக்கு, மத்தியிலும் பொருளாதார நிலைத்தன்மையை பேணுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகனை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பாராட்டினார்.
மேலும், டித்வா புயலால் சேதமடைந்த உள்கட்டமைப்பை மீட்டெடுக்கத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.
டித்வா புயல் பேரிடருக்குப் பதிலளிக்கும் விதமாக ஆசிய வளர்ச்சி வங்கி இதுவரை வழங்கிய உதவிகளுக்கும், இலங்கையுடனான அதன் பரந்த அபிவிருத்தி ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி திசாநாயக்க பாராட்டு தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியை அடையும் அதேவேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவது தற்போதைய அரசாங்கத்தின் ஒரு முக்கிய நோக்கமாகத் தொடர்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் காண தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய உயர்நிலப் பகுதிகளில் உள்ள நீர் அமைப்புகளைப் பாதுகாப்பது உட்பட, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு ஆதரவளிக்க வங்கி தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.


















