எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிப்பதற்கான புதிய வழிகாட்டல் கோவையை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி வெளிட்டார்.
எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக செயற்படவேண்டும் என ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, அதிகாரிகள் பணிக்குச் சமுகமளிக்கும்போது தனித்தனி வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து அல்லது ‘Carpooling’ முறையைப் பயன்படுத்த வேண்டும் என அந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கலந்துரையாடல்களுக்காக அதிகாரிகளை தூர இடங்களிலிருந்து அழைப்பதைத் தவிர்த்து, Zoom அல்லது Google Meet போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை பரிமாறிக் கொள்ள மின்னஞ்சல் அல்லது WhatsApp போன்ற முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் ஆவணங்களை நேரில் கொண்டு செல்வதை ஆகக்குறைந்த மட்டத்தில்பேண வேண்டும். அரச துறையிலுள்ள 92,000 வாகனங்கள் ஊடாக நாள் ஒன்றுக்கு ஒரு லீற்றர் எரிபொருளைச் சேமித்தால், வருடத்திற்கு 110 மில்லியன் லீற்றர் எரிபொருளைச் சேமிக்க முடியும்.
அத்துடன் அனைத்து குளிரூட்டி இயந்திரங்களின் வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் பேணப்படுவது கட்டாயமாகும். அலுவலக நேரங்களில் தினமும் ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் குளிரூட்டி வசதியை அணைத்துவிட்டு, மின்விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் தெரிவித்துள்ளார்.


















