இலங்கையில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின் பாவனை அதிகமாக உள்ளதாக கூறியுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, இந்த காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமான பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் ஒரு மின் குமிழையாவது அணைத்து, தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்க முடியும்.
மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் மின்சார உற்பத்திக்காக அதிக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. பகல் நேரங்களில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆகவே இரவில் ஒத்துழைப்பு நல்குங்கள்.
மக்களுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கம். பிராந்தியத்தில் அந்த பணியை நாங்கள் மிக சிறப்பாக செய்துவருகின்றோம்.
எதிர்காலத்திலும் நாம் அதைத் தொடர வேண்டும். பலர் மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு பரிந்துரை செய்கிறார்கள். அரசாங்கம் அதனை மறுக்கிறது. மே மாதம் வரை அனைத்து நுகர்வுகளுக்கும் தேவையான எரிபொருள் எங்களிடம் உள்ளது. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம் என்றார்.


















