-துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை-
-வி.சரவணன்-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள வீரசிங்கம், சித்தாறு, ஜங்கன், சிவசாமி ஆகிய அணைக்கட்டுக்களின் பணிகளை உரியகாலத்திற்குள் முழுமைப்படுத்தி விவசாயிகளிடம் கையளிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரியுள்ளார்.
உலகவங்கியின் நிதி உதவியில் ‘சியாப்’ நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின்கீழ் காணப்படும் வீரசிங்கம், சித்தாறு அணைக்கட்டுக்கள் மற்றும் மல்லிகைத்தீவு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட ஜங்கன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுக்களை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் ரவிகரன் எம்.பி.யிடம் முறையிட்டிருந்தனர்.
இதற்கு அமைவாக குறித்த அணைக்கட்டுக்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கடந்த ஜனவரி 27 இல் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரவிகரன் எம்.பி.யினால் முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பெப்ரவரி மாதத்திற்குள் குறித்த அணைக்கட்டுக்களின் வேலைகளை பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரால் பதிலளிக்கப்பட்டது.
எனினும், இதுவரை குறித்த அணைக்கட்டுக்களின் வேலைகள் பூத்திசெய்யப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் அண்மையில் ரவிகரன் எம்.பி.யிடம் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இத்தகைய சூழலில் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் மாவட்ட கமநல உதவி ஆணையாளரை நேற்று ரவிகரன் எம்.பி. சந்தித்து அணைக்கட்டுக்களின் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையுமென ஆணையாளரிடம் கேட்டுள்ளார்.
இதற்கு உதவி ஆணையாளர் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள சிவசாமி அணைக்கட்டினுடைய கட்டுமானப்பணிகள் பூத்திசெய்யப்பட்டுள்ள நிலையில் வீரசிங்கம், சித்தாறு அணைக்கட்டுகளின் கட்டுமானப்பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் பூர்த்திசெய்யப்படும்.
அத்துடன் ஜங்கன் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும் பூர்த்தி செய்யப்படுமெனவும் முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளர் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில்,அணைக்கட்டு அமைக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றமைக்கு கமநல உதவி ஆணையாளருக்கு நன்றி தெரிவித்த ரவிகரன் எம்.பி.அணைக்கட்டின் பணிகளை உரியகாலத்திற்குள் முழுமைப்படுத்தி விவசாயிகளிடம் கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.


















