-38 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு-
-த.சுபேசன்-
யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் பாடசாலை ஒன்றின் உப அதிபர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட நிலையில் திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரான பெண் ஒருவரையும் நேற்று பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுண்டுக்குளி பகுதியில் வசிக்கும் குறித்த உப அதிபருடைய வீட்டில் வீட்டுப் பணிப் பெண் வேலைக்கு குறித்த பெண் தங்கியிருந்த நிலையில் உப அதிபரின் மனைவியின் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு குறித்த பெண் தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பெண் வீட்டுப் பணிப்பெண்ணாக சேரும்போது வீட்டாருக்கு வழங்கிய பெயர் முதல் அத்தனை விடயங்களும் போலியானவை என்பது பின்னரே தெரியவந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் விரைந்து செயற்பட்ட யாழ்ப்பாண பொலிஸார் மேற்படி பெண்ணை கைது செய்ததுடன் தங்க நகைகளையும் மீட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















