-வடக்கு அவைத் தலைவர் சி.வி.கே.-
-சொ.வர்ணன்-
வடக்கு மாகாண சபைக்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட சுமார் 80 மில்லியன் ரூபாய்களில் 57 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாகாண சபை தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2025 ஆம் ஆண்டு மாகாண சபைக்கு கிடைக்கப்பெற்ற சுமார் 80 மில்லியன் ரூபாய்களில் 23 மில்லியன் ரூபாக்கள் மட்டும் செலவழிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 57 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண நிதி திரும்பியது என பலர் குறிப்பிட்ட நிலையில் எமக்கு கிடைத்த நிதியை இயன்றவரை செலவு செய்தோம்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களை குற்றம் சாட்டி வந்த நிலையில் இவர்களின் அரசாங்கத்தில் 57 மில்லியன் ரூபா ஏன் திரும்பியது என ஆராய வேண்டும் என தெரிவித்தார்.
இதன்போது, கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை அடுத்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


















