-சொ.வர்ணன்-
வடக்கு கிழக்கில் பெண்களை நோக்கி ஏவிவிடப்படும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அனைத்தும் ஏதோ இரு வகையில் பின்னணி ஒன்றின் தாக்கமாகவே இருக்கின்றது என குற்றம் சாட்டிய, ஈழத் தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் வடக்கு கிழக்குக்கான பணிப்பாளர் வாசுகி சுதாகரன், அவ்வாறான நிலை உருவாகிக் கொண்டிருப்பதை நிறுத்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றுதிரக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில்,
பெண்களுக்கெதிரான வன்முறைகள் தற்போது உச்சம்பெற்றுள்ளது. குறிப்பாக கிழக்கில் பெண்களை கொன்றும் கடத்திக் கிணற்றில் போட்டும் கொள்ளை அடிக்கும் நிலை உருவாகி இருக்கின்றது. வடக்கில் காசுகுக்காக தாயையே கொல்லும் நிலைக்கு மகளே உந்தப்படும் நிலை.
இதற்கு போதைப் பொருள் பாவனையே காரணமாக இருக்கின்றது.
இந்த போதைப்பொருள் எமது பகுதிக்கு திட்டமிட்டே திணிக்கப்பட்டிருக்கின்றது. இதை இன்னணியில் இருந்து திணித்து எமது இளைஞர்களை படுகுழிக்குள் வீழ்த்தும் சக்தியை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.
பாடசாலை மாணவர்களை நோக்கி ஏவப்படும் இந்த போதைப்பொருள் சீரழிவு இன்று அனைத்து மாணவ மாணவியரையும் பாதிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
இதற்கு எற்றோரும் ஏதோ ஒரு வகையில் உடந்தையாகவே இருக்கின்றனர். ஏனெனில் பெற்றோர் தமது பிள்ளைகள் மீது அக்கறை கொள்வதும் செயறாடுகளை கவனிப்பதும் இன்றைய காலத்தில் முற்றாக இல்லாதுபோய்விட்டது. கவனிப்புக் குறைவே பெரிய பிரச்சினையாக இன்று உருவெடுத்துள்ளது.
எனவே, போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க நாம் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.
சட்டத்தரணிகளும் இவ்விடயத்தில் கரிசனை கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வழிசமைப்பதும் அவசியம்.
மேலும் எமது மக்களது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளான காணாமல் போன உறவுகளுக்கான தீர்வு, வெள்ளைக்கொடி விவகாரத்துக்கான தீர்வு, இனப் படு கொலைக்கான தீர்வு என நீண்டு செல்லும் இப் பிரச்சினைகளுக்கு இந்த அரசாவது தீர்வு கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அரசும் கடந்த அசுகளின் நகலாகவே இருக்கின்றது எனத் தெரிவித்தார்.


















