-போக்குவரத்து அதிகாரசபை அறிவுறுத்து-
கடந்த 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 12.19 வீத பஸ் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, புதிய கட்டண விபரங்களை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துமாறு போக்குவரத்து அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (யு) இன் படி, ஒவ்வொரு பேருந்திலும் திருத்தப்பட்ட கட்டணப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இரத்து செய்யப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட ஒரு ரூபா கூட மேலதிகமாக அறவிட முடியாது. அவ்வாறு அறவிடுவது சட்ட விரோதமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக அதிகரிப்பு. அதிகபட்ச கட்டணம் 2,159 ரூபாவில் இருந்து 2,422 ரூபாவாக அதிகரிப்பு.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாக அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0712595555 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கு முறைப்பாடு அளிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


















