-உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர்
-க.கனகராசா-
பெற்றோர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழவேண்டுமென குறிப்பிட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் பெற்றோரின் கைகளிலே பிள்ளைகளின் எதிர்காலம் உள்ளதெனவும் தெரிவித்தார்.
நவாலி சென்பீற்றர் றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையின் செயல்பட்டு மகிழ்வோம் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் த.ரமேஷ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் விருந்தினராக கலந்து உரையாற்நுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
ஆண்டு ஒன்நு முதல் ஐந்துவரை பெற்றோர்கள், பிள்ளைகளை கடுமையாகவும் கண்டிப்பாகவும் பரீட்சைக்கு தயார்படுத்தி அவர்களின் பருவகால செயல்பாட்டை இல்லாது செய்வதுடன் ஆண்டு ஆறில் இருந்து ஒன்பது வரை கவனிக்காது கையறுநிலையில் விடுகின்றனர். இந்தக்காலப்பகுதி பிள்ளையின் திசையை மாற்றுகிறது என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்.
பிள்ளைகள் என்பவர்கள் சடப்பொருள் அல்ல. நாம் நினைத்ததை செய்வதற்கு அவர்கள் உயிரோட்டமுள்ள சமூகப்பிராணிகள் என்பதை பெற்றோர் உணரவேண்டும். எனவே,அவர்களது நன்மைகள் தீமைகள் பற்றியும் சிந்திக்க வேண்டுமே தவிர நாம்விட்டதை, இழந்ததை பிள்ளைகள் மூலம் பெறவேண்டும் என நினைப்பது பிள்ளையார் பிடிக்கபோய் குரங்கான கதையாக மாறலாம்.
எனவே பெற்றோர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழவேண்டும்.பெற்றோரின் கைகளிலே பிள்ளைகளின் எதிகாலம் உள்ளது என்றார்.


















