வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘சுரகிமு லங்கா’ தேசிய வேலைத் திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
மத்திய கிழக்கு போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய வலுசக்தி பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்யும் இந்தத் திட்டம் இன்றிலிருந்து அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே ‘சுரகிமு லங்கா’ திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எவ்வித தடைகளும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















