-வி.சரவணன்-
சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் என உரியதரப்பினர்களிடம் பலதடவைகள் முறையிட்டுள்ளபோதும், குறித்த சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த உரியதரப்பினர் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்த சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்கான போதிய ஆளணி தங்களிடம் இல்லை என்று மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் கைவிரித்துள்ளது.
இத்தகைய சூழலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அதிகரித்துள்ள குறித்த சட்டவிரோத கடற்றொழில்களை முற்றாக கட்டுப்படுத்த வலியுறுத்தியே முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து இந்த தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.


















