ரஷ்யாவின் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்காவின் ‘ரேதியொன்’ நிறுவனத்துடன் இணைந்து ‘பெட்ரியொட்’வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இம்மாதத் தொடக்கத்தில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO)மாநாட்டின்போது, உக்ரைனின் சொந்த பயன்பாட்டிற்காக பேட்ரியாட் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, உக்ரைன் தலைநகர் கீவில் ரேதியொன்’ நிறுவனப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த கூட்டுத் தயாரிப்புத் திட்டத்திற்காக அரசு மற்றும் தனியார் துறை குழுக்கள் இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ரஷ்யாவின் பிரபல ‘வைல்ட்பெர்ரிஸ்’ இணையவழி வர்த்தக நிறுவனத்தின் பிரதான சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கிரீமியா உள்ளிட்ட இடங்களில் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.


















