மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த புதியவர்கள் ஆர்வம் காட்டி வருவது ஜனநாயக சூழலை மேலும் வலுப்படுத்தும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச வட்டார உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி சமூகத்தின் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த புதியவர்களும் அரசியல் களத்தில் களமிறங்க விருப்பம் தெரிவித்து வருவது வரவேற்கத்தக்க விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் என்பது குறிப்பிட்ட சிலருக்கான துறையாக மட்டுப்படுத்தப்படாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் தமது பங்களிப்பை வழங்கக்கூடிய களமாக அமைய வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புதியவர்கள் அரசியலுக்குள் வருவதன் மூலம் புதிய சிந்தனைகள், அணுகுமுறைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற புதிய செயற்றிட்டங்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் பல்வேறு தரப்பினரும் போட்டியிட ஆர்வம் காட்டுவது ஜனநாயக சூழலை வலுப்படுத்தும் எனத் தெரிவித்த அவர், மக்கள் தங்களது அரசியல் விருப்பங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தி தங்களுக்கு பொருத்தமான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மாகாண சபைகள் மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களில் முக்கிய பங்காற்றக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பாக இருப்பதால், திறமையானதும் மக்கள் சார்ந்ததுமான பிரதிநிதித்துவம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் வட்டாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, பிரதேச மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.


















