வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தாயார்கள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மிகவும் மோசமான ஒரு சம்பவமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிக்குழுவின் பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் (Ana Lorena Delgadillo Pérez) கவலை தெரிவித்தார்.
சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, “சர்வதேச நீதியை நோக்கிய பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மாநாடு நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தாயார்களின் துயரங்களை நாம் நன்கு அறிவோம். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே தாயார்கள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் உண்மைக்கும் நீதிக்குமான தேடலில் தளர்வு நிலை இருப்பதை மறுக்க முடியாது.
பாதிக்கப்பட்ட தரப்புகளுடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகின்ற போதிலும், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இறுதி எண்ணிக்கையை இதுவரை பெற முடியவில்லை.
விடுதலைப் புலிகள் காலம் மற்றும் ஜே.வி.பி. காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம். அதேவேளை வெள்ளை வேன் கடத்தல்கள் மற்றும் பணத்திற்காகக் கடத்தப்படுதல் எனப் பல வடிவங்களில் இலங்கையில் காணாமல் ஆக்கப்படுதல் இடம்பெற்றுள்ளது.
வடக்கு, கிழக்கில் அரச படைகளால் காணியை இழந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் ஆதங்கங்களையும் நாங்கள் கேட்டறிந்து பதிவு செய்துள்ளோம்.
இம்மாநாடானது பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் மேலும் நெருங்குவதற்கும், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் என்பதே எமது விருப்பமாகும்.
எமக்கு வழங்கப்பட்டுள்ள மனிதாபிமான ஆணையின் அடிப்படையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க உறுப்பு நாடுகளை ஒருங்கிணைக்க முடியும். இதுவரை 61,626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையிலும், உலகளவில் காணாமல் ஆக்கப்படுதல் தொடரவே செய்கிறது.
முறையான ஆதாரங்களும் சாட்சிகளும் இருந்தபோதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகளை அரசு அதிகாரிகள் மறைக்க முயற்சித்தது மட்டுமன்றி, மறைத்தும் வைத்துள்ளனர். இதன் பாதிப்பை பாதிக்கப்பட்ட நபர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.
உண்மைக்கும் நீதிக்குமான தேடலில் அனைத்துத் தரப்பினரும் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தமது பணிக்குழுவின் முழுமையான பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.


















