இலங்கை அணி எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் இருபதுக்கு – 20 தொடரிலிருந்து இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் பிநுர பெர்னாண்டோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஶ்ரீலங்கா கிரிக்கெட் , நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர்கள் இருவரும் இன்னும் குணமடைந்து வருவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று (4) குறிப்பிட்டுள்ளது.
குறித்த தொடரின் போது குசல் மெண்டிஸ் வலது கால் காயத்திற்கும், பிநுர பெர்னாண்டோ முதுகுப் பகுதி காயத்திற்கும் இலக்காகியிருந்தனர்.
அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவானது குசல் மெண்டிஸிற்கு பதிலாக பவன் ரத்நாயக்கவையும், பிநுர பெர்னாண்டோவிற்கு பதிலாக தில்ஷான் மதுஷங்கவையும் இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை இருபதுக்கு – 20 குழாமில் பெயரிட்டுள்ளது.
அத்துடன், குசல் மெண்டிஸிற்கு பதிலாக இலங்கை இருபதுக்கு – 20 அணியை வழிநடத்தும் பொறுப்பு சரித் அசலங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைக்கும் வகையில் முதலில் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடர் நடைபெறவுள்ளதுடன், அதன் முதல் போட்டி வரும் 15 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது.


















