“எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட வேண்டும்? எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்? அரச உயர் அதிகாரிகளே, அரசாங்கமே பதில் சொல்!” – என்ற உருக்கமான கோஷங்களுடன், மயிலிட்டி காணி இழந்த மக்கள் தமது காணி உரிமைக்கான போராட்டத்தை இன்று 20ஆவது வாரமாகவும் தொடர்ந்தனர்.
மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
பல வருடங்களாக தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் காத்திருக்கும் தங்களின் நிலை குறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மனம் தளர்ந்த நிலையில் கருத்து தெரிவித்தனர்.
“எங்களுடைய காணிகளை கேட்பதற்காகத்தான் இத்தனை வாரங்களாக வீதியில் நிற்கிறோம்.
எங்களுடைய நிலம் எங்களுடையதுதானே? அதை மீண்டும் பெறுவதற்கு எத்தனை வாரங்கள் நாம் போராட வேண்டும்? எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?” என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அரசாங்கம் மாறினாலும் தங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை எனக் கவலை தெரிவித்த மக்கள், தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளைத் தாண்டி, தமது காணிகளை நடைமுறையில் விடுவிப்பதற்கான நடவடிக்கையே தங்களுக்கு அவசியம் என தெரிவித்தனர்.
“எங்களுடைய பிள்ளைகள் தங்கள் சொந்தக் காணியில் வாழ வேண்டும். எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் நாங்களும் மீண்டும் வழ்ந்து மடிய வேண்டும். அதற்காகத்தான் இன்று 20ஆவது வாரமாகவும் இங்கு நிற்கிறோம்.
எங்கள் போராட்டத்தை அரசாங்கம் இனியும் புறக்கணிக்கக்கூடாது” என அவர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.
தமது காணிகள் தொடர்பில் அரச உயர் அதிகாரிகளும் அரசாங்கமும் தெளிவான பதிலை வழங்க வேண்டும் என வலியுறுத்திய மக்கள், “போராட்டம் எத்தனை வாரங்கள் தொடர வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்கவில்லை, எங்கள் காணிகளை எப்போது விடுவிக்கிறீர்கள் என்பதுதான் அதனைத் தீர்மானிக்கும்” என தெரிவித்தனர்.


















