இலங்கை கடற்படையினரால் நேற்று தலைமன்னார் பேசாலை மற்றும் புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கடல் மார்க்கமாகக் கடத்த முயன்ற 4 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கத்துடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தங்கத்தை கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்குக் கொண்டு செல்ல முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
வடமத்திய கடற்படைக் கட்டளை பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, தலைமன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.
குறித்த படகில் மணல் சாக்குக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோகிராம் 410 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
இதனுடன் தொடர்புடைய 25 மற்றும் 28 வயதுடைய பேசாலைப் பகுதியைச் சேர்ந்த 2 சந்தேகநபர்கள் டிங்கி படகொன்றுடன் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பிரதி சுங்கப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வடமேற்கு கடற்படைக் கட்டளை பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் நேற்றிரவு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த பகுதியில் சோதனையிடப்பட்ட டிங்கி படகின் எரிபொருள் கொள்கலனுக்குள் சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்தப்பட்ட சுமார் 3 கிலோகிராம் 25 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 மற்றும் 50 வயதுடைய கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 2 சந்தேகநபர்கள், டிங்கி படகுடன் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

















