இலங்கையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் அடிப்படையிலான குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் அனைத்தும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தர நிர்ணயச் சான்றிதழை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், தேவையான எஸ்.எல்.எஸ். தரநிலைகளை பூர்த்தி செய்து உத்தியோகபூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காண்பிக்காத பட்சத்தில், அத்தகைய போத்தல்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடிநீர் திரவங்களை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் போத்தல்களுக்கான இலங்கைத் தர நிர்ணய விவரக்குறிப்பு SLS 1616 மற்றும் பொலிமர் பொருட்களால் செய்யப்பட்ட பாலூட்டும் போத்தல்களுக்கான இலங்கை தர நிர்ணய விவரக்குறிப்புSLS 1306 என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த பணிப்பு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் முன்கூட்டிய ஆய்வையும் அங்கீகாரத்தையும் கோருகிறது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் இல. 9/2003 மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கவும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும் இலக்காகக் கொண்டுள்ளது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

















