வைத்தியர்களுக்கான பணியிடமாற்றம் உள்ளிட்ட செயற்பாடுகளில் அரசியல் தலையீடுக்கு எதிராக வைத்தியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நேற்றுத் திங்கட்கிழமை சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து மேற்படி தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாரூக் தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவியரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் நிர்வாக கட்டமைப்பில் பணியாற்றும் வைத்தியர்களின் பணியிடமாற்ற செயற்பாடுகளில் ஊடுருவியுள்ள எல்லை மீறிய அரசியல் தலையீடுகளால் வைத்தியர்கள் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
பணியிடமாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் அதிகாரிகளுக்கு இதுவரை உயரிய தீர்வு வழங்கப்பட வில்லை. தாபன விதிக்கோவைக்கு அமையவே வைத்தியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன. எனினும் தெகியத்தகண்டிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுகளுக்கு அப்பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக நீண்டகாலமாக இடமாற்றம் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெகியத்தகண்டிய, அம்பாறை மற்றும் மாஹவ ஆகிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
மேற்படி தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த நாளை புதன்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட தீர்மணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திங்கட்கிழமை சுகாதார அமைச்சின் விசேட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பணியிடமாற்ற பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட கடிதத்தை தொடர்ந்து வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது என்றார்.


















