பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகளை வரவு – செலவு திட்டத்துக்கு முன்னர் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய வழங்கிய வாக்குறுதிக்கமைய 1700 ரூபா நாட் சம்பளத்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து கடந்த செப்டெம்பர் 9ஆம் திகதி தொழில் அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடொன்று எட்டப்படவில்லை.
எனவே இது குறித்த தீர்மானத்தை அறிவிப்பதற்கு அரசாங்கத்தால் முதலாளிமார் சம்மேளனத்துக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கமைய இன்றுடன் ஒரு மாத கால அவகாசம் நிறைவடைகிறது.
இந்நிலையிலேயே அரசாங்க தகைவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வரவு – செலவு திட்டத்திலும் குறிப்பிட்டிருந்தார். அவர்களுக்கு 1700 நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதை தாம் கொள்கை ரீதியில் அங்கீகரிப்பதாகவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய இந்த விவகாரத்தில் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தலையிட்டு முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.
அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது. பெருந்தோட்ட நிறுவனங்களே இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய பிரதான தரப்பாகவுள்ளது. எனவே இதில் அவர்களது இணக்கப்பாடு அத்தியாவசியமானது. பெருந்தோட்ட கம்பனிகளுடன் 3 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்தவின் பங்கேற்புடன் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் இன்னும் இறுதி தீர்மானத்தை எட்ட முடியவில்லை. 1700 ரூபா நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அறிவித்திருக்கின்றோம். இதில் அவர்களுக்கு காணப்படும் பிரச்சினைகள்இ செல்லக் கூடிய கட்டம் உள்ளிட்டவை தொடர்பில் அறிவிக்குமாறும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்காக தீர்மானிக்கப்பட்ட தினம் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் வரவு – செலவு திட்டத்துக்கு முன்னர் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் எவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்படுகிறது. உறுதியளித்தவாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கின்றேன் – என்றார்.

















