இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்று அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அங்கு அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற சூழ்நிலைகள் தொடர்ச்சியாக நிலவிவருவதால் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தம்நாட்டு மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா குடிமக்களுக்காக அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ள புதிய பயண ஆலோசனை அறிக்கையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் சிறிய அல்லது எந்த எச்சரிக்கையுமின்றி நடந்துள்ளன என்றும் அந்தத் துறை தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் தண்ணீர் பீரங்கிகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர், மேலும் சிறிய அல்லது எந்த எச்சரிக்கையும் இல்லாமல் போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடும். இதனால் அமைதியான கூட்டங்கள் உட்பட எல்லாக் கூட்டங்களையும் தவிர்க்கவும் என்று அந்தத் துறை மேலும் அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள் சந்தைகள் மற்றும் விற்பனை அங்காடிகள், அரச கட்டடங்கள், ஹோட்டல்கள், கிளப்புகள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், விளையாட்டுக்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையங்கள் போன்ற இடங்கள் பயங்கரவாதிகளின் இலக்குகளாக இருக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட கண்ணிவெடிகள் தோராயமாக 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளன. பெரும்பாலான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன, ஆனால் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சில பகுதிகள் இன்னும் ஆபத்தானவை. வடக்கு மாகாணத்தின் உள்ள மாவட்டங்களில் இதன் அதிக செறிவு உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


















