-த.சுபேசன்-
உடல் நலனில் கவனம் செலுத்துவதுபோல் உளநலனிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது என பூநகரி பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
உலக உளநல தினத்தை முன்னிட்டு பூநகரி ஞானிமடம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கருத்தமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பேரழிவுகள் மற்றும் அவசர நிலைகளில் மனநல சேவைக்காக அணுக முன்வரவேண்டும் இதுவே உலக உளநல தினத்தின் எண்ணக்கரு. உளநலனைப் பேணாது எம்மால் தரமான வாழ்க்கையை வாழ முடியாது. நாம் ஒவ்வொருவரும் பணியிடத்திலும் கற்றல் நிலையங்களிலும் வீட்டிலும் உளநலனிற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும்.
வீட்டில் குடும்ப உறுப்பினர்களோடு ஒன்றாக அமர்ந்து மனம்விட்டு உரையாட தினமும் ஒருவேளையை ஆவது ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நல்ல உறவு நிலை தொடர்பாடல் இல்லாத குடும்பம் துண்டாடப்பட்ட தனிநபர்களாகவே காணப்படும்.
உள நலனை மேம்படுத்த தியானமாக தினமும் கண்களை மூடி பதினைந்து நிமிடம் எமது சுவாசத்தை அவதானித்தல், உடற்பயிற்சியாக முப்பது நிமிடங்கள் ஆழமான மூச்சு வாங்கக்கூடிய உடல் வியர்க்கக்கூடிய செயல்களில் ஈடுபடுதல்,
ஏழு முதல் எட்டு மணித்தியாலங்கள் இடையறாது தூங்குதல்,சத்தான சமபல உணவை உள்ளெடுத்தல், நல்ல உறவை சுற்றியிருப்போருடன் பேணுதல், தொடர்ந்து கற்றுக்கொண்டிருத்தல், டிஜிற்ரல் உபகரண திரைகளின் பாவனை நேரத்தை குறைத்தல், மனதுக்கு பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடுதல், எப்போதும் நன்றியுணர்வுடன் இருத்தல், அவரச வேளைகளில் உதவிகளைக் கோரிப்பெற முன்வருதல் என்பன மிகவும் அவசியமாக கடைப்பிடிக்க வேண்டியவையாகும்.
முழு உளவிழிப்புணர்வுடன் எமது ஒவ்வொரு கருமங்களையும் ஆற்றப்பழக வேண்டும். அனேகமான விபத்துக்களும் ,தவறுகளும் ஏற்படுவதற்குக் காரணம் நாம் பூரண உளவிழிப்புர்வுடன் அச்செயற்பாடுகளில் ஈடுபடாமையேயாகும்.
மனரீதியான அழுத்தம், கவலை, பதட்டம் என்பன ஏற்படும்போது தவறான முடிவுகளை எடுக்காது வைத்தியசாலைகள் மற்றும் பிதேச செயலகங்களிலுள்ள
சமூகப்பணியாளர், உளவளத்துணையாளர்களை அணுகலாம். அல்லது சுகாதார அமைச்சின் தேசிய உளநல உதவிச் சேவையை 1926 எனும் தொலைபேசி எண்ணூடாக அழைத்து இருபத்துநான்கு மணிநேரமும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

















