எமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு மேலதிகமாக நாங்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளை கற்றிருப்பது எங்களுக்கு எப்போதுமே கைகொடுக்கும். ஏனைய மொழிகளை அறிந்திருந்தால் சிறப்பாக பணியாற்ற முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வடக்கு மாகாண சபையுடன் இணைந்து மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு நடத்திய சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் பட்டமளிப்பு விழா வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஹிந்தி மொழி கற்பிக்கப்பட்டபோது சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்கள். நாங்கள் இன்னொரு மொழியை அறிந்திருப்பதில் தவறில்லை. எங்களை நாங்கள் வளர்த்துக் கொள்வதற்கு பிறமொழியை அறிந்திருப்பது உதவியாக இருக்கும்.
நாங்கள் எங்கள் கலாசாரத்தை, பண்பாட்டை, பிரச்சினையை மற்றையவர்களுக்குச் சொல்லவேண்டுமானால் அவர்களுடைய மொழியை அறிந்திருப்பது அவசியம். தொடர்பாடலுக்கும் இலகுவாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 35 உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சமிந்த மாலேஹம, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.கண்ணதாசன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்; செ.பிரணவநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் திருமதி எழிழரசி அன்ரன் யோகநாயகம், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


















