-கஜிந்தன்-
பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது என அந்தக் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று மேற்படி விடயம் தொடர்பில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்துக்கும் இடையிலான எமது நிறுவனத்தின் பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு பருவப் பெயர்ச்சி மழை காரணமாக நவம்பர் 2 ஆம் திகதியில் இருந்து ஜனவரி இரண்டாம் வாரம் வரை இடைநிறுத்தியிருந்தோம். இம்முறை நாங்கள் அவ்வாறு எந்தவிதமான இடைநிறுத்தலையும் மேற்கொள்ள மாட்டோம். காலநிலை சீராக இல்லாமல் விட்டால் மாத்திரமே கப்பல் போக்குவரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் காலநிலை சீராகியதும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்போம்.
தீபாவளியை முன்னிட்டு தற்போது எமது கப்பல் சேவை தினசரி இடம்பெற்று வருகின்றது. ஒக்ரோபர் 28 வரை தினமும் போக்குவரத்து சேவை இடம்பெறும். தீபாவளி தினத்தன்று மாத்திரம் சேவை இடம்பெறாது.
ஒக்ரோபர் 29 ஆம் திகதியில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு, கப்பல் திருத்த பணிகளுக்காக எமது கப்பல் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தவுள்ளோம். பின்னர் நவம்பர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்போம் என்றார்.


















