‘இலங்கைத் தமிழ்ச் சிறுவர் இலக்கியப் படைப்பாளர் மாநாடு’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுழிபுரத்திலுள்ள கே.ஏ.எஸ் சத்தியமனையில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் இடதுசாரிய முற்போக்கு சிந்தனையாளரான கே.ஏ.சுப்பிரமணியம் நினைவாக, அவரது மனைவியும் எழுத்தாளருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை முழுவதிலும் இருந்து அனைத்து எழுத்தளார்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பிரத்தியேக நூலகம் ஒன்றும் திறக்கப்படவுள்ளது. அத்துடன் புதிய சிறுவர் நூல்கள் வெளியீடும், கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனுபவ எழுத்தாளர்களான திக்குவல்லை கமால், ச.அருளானந்தன் (கேணிப்பித்தன்) ஓ.கே. குணநாதன், அகளங்கன், கோகிலா மகேந்திரன் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்றைய தினம் அனைத்து சிறுவர் இலக்கியம் படைத்த ஆளுமைகளின் தகவல்களை ஒன்று திரட்டி, ஒரு காத்திரமான கையேட்டை அச்சிட்டு வெளியிட இருக்கின்றனர். எனவே, இது வெறுமனே ஒரு சிறுவர் நிகழ்வாக மட்டுமல்லாது எம் தேசத்தின் சிறுவர்களுக்கான எழுத்துக்களைத் தந்த ஆளுமைகளை ஒன்று சேரச் சந்திப்பதற்கான வாய்ப்பாகவும் அமையப் போகிறது.
வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் இருப்பிட, உணவு ஒழுங்குகளையும் கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகம் ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















