-த.சுபேசன்-
தென்மராட்சி, தனங்களப்புப் பகுதியில் குப்பைகளுடன் சேர்த்து பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்பட்டு வருவதால் சுற்றுச்சூழலுக்கும,; மனித சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள வீதியும் அவ்வப்போது புகையில் மூழ்குவதால் விபத்துகளும் ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம், மன்னார் வீதியின் தனங்களப்பு பகுதியில் உப்பளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள சாவகச்சேரி பிரதேச சபையின் இறுதிக்கழிவு சேகரிக்கும் இடத்திலேயே இது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் நச்சு வாயுக்களால் பல சுகாதார கேடுகள் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுபடுவதால் அவற்றை தரம் பிரித்து சேகரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்துவது, மீள்பாவனைக்குட்படுத்துவது அல்லது சேமித்து வைப்பதே பொருத்தமானதாகும்.
பிரதேச கழிவு முகாமைத்துவத்தின் முக்கிய பங்காளியான பிரதேசசபையே இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது குறித்து பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்களால் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைக்கும் அதேநேரம் குறித்த பிரதேச சபைக்கும் கடந்த காலங்களில் தெரியப்படுத்தியும் பொலித்தீன், பிளாஸ்ரிக் எரிப்பதை நிறுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.


















