அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று முன் தினம் ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிதியாண்டில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு மீள் கையளிக்க இடமளிக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கோருகின்றேன்.
இவ்வாறு திறைசேரிக்கு மீளக் கையளிப்பதன் மூலம் தேவையான அபிவிருத்திப் பணிகள் நடைபெறாததுடன், பணம் விரயமாகும். அத்துடன் ஒரே திட்டத்திற்கு மீண்டும் மீண்டும் பணம் ஒதுக்குவதால், புதிய திட்டங்களை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்படும்.
கடந்த காலங்களில் அரச திட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப்பணிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்ட போதிலும், அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் பராமரிப்பு தொடர்பில் உரிய மதிப்பீடுகள் இடம்பெறாததால், அதன் ஊடாக அரசாங்கத்திற்கு மேலதிக செலவினங்கள் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை சார்க் கலாசார நிலையம், அநுராதபுரம் கேட்போர் கூடம் போன்ற பல கட்டிடங்களின் பராமரிப்புச் செலவு அதிகமாக உள்ளதால் அவற்றை பொறுப்பேற்க எந்த நிறுவனமும் முன்வராத நிலை உருவாகியுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா பங்களாக்கள், விடுதிகள், பொது வர்த்தக நிலையங்கள் போன்ற கட்டிடங்கள் வெறிச்சோடிய இருண்ட இடங்களாக மாறிக்கிடக்கின்றன. அவ்வாறானவற்றை தனியார் துறை நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமான பொறிமுறையாகும் என்றார்.


















