வாழைச்சேனைக் காகிதத் தொழிற்சாலை இலாபமீட்டுமளவுக்கு அதன் செயற்பாடுகள் உயர்ந்து வருகின்றதாக காகித உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.
அரச நிறுவனங்கள் ஒரு வருடகாலத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தும் பொருட்டு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூடப்பட்டிருந்த வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை இந்த அரசாங்கத்தின் கீழ், மீண்டும் இயக்கப்பட்டது. தொழிற்சாலையிலிருந்த குறைபாடுகள் மற்றும் தேவைகள் நிவர்த்திக்கப்பட்டு மீண்டும் எமது தொழிற்சாலை மீள ஆரம்பிக்கத் தொடங்கியது.
இதற்குத் தேவையான உதிரிப் பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டன. பழுதுபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதே அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இதற்காக, 12 மணி நேரமாக இருந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை முழு நாளாக அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதற்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும் நவீனமயமாக்கப்பட்டன. இதன் விளைவாக, இந்த ஆண்டு மே மாதத்திற்குள், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையின் அனைத்து செலவுகளையும் ஈடுகட்டக்கூடிய உற்பத்தியை முன்னெடுக்க முடிந்தது.
தற்போது இலாபத்தை ஈட்டி வரும் எமது காகித நிறுவனம், வங்கிக் கடன்கள் மற்றும் மின்சாரக் கட்டணங்களையும் சிரமமின்றி செலுத்தி வருகிறது. பாழடைந்த நிலையிலிருந்த 150 ஊழியர் வீடுகளைப் புதுப்பிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன . எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு அவ்வீடுகள் கையளிக்கப்படும். அந்தப் பகுதியை சுற்றுலாத் துறைக்குப் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை அதன் செழிப்பான உச்சக்கட்ட காலத்தில் காகித நகரம் என்றே அழைக்கப்பட்டது.
காகித நகரத்துக்கு என்று ஒரு தனி ரயில் நிலையம் இருந்தது. அந்த ரயில் நிலையத்திலிருந்து தொழிற்சாலை தளத்திற்கு ஒரு ரயில் பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.


















