-சொ.வர்ணன்-
அதிகாரிகளின் அசமந்தமான செயற்பாட்டினாலேயே சின்ன வெங்காய செய்கையில் ஈடுபடுவோருக்கு காப்புறுதி திட்டம் இல்லாதுள்ளதாக யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் தியாகலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு கலந்துரையாடலின் போதே மேற்கண்ட குற்றச்சாட்டை சம்மேளனத் தலைவர் முன்வைத்து மேலும் தெரிவிக்கையில்:
விவசாய அமைச்சர்கள் யாழ். மாவட்டத்திற்கு வருகை தருகின்ற வேளை யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற சின்ன வெங்காயத்திற்கு காப்புறுத் திட்டத்தை ஏற்படுத்தி தருமாறு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
இவ்வாறே,தற்போதைய விவசாய அமைச்சரிடமும் மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்தோம். இதற்கு அமைச்சர் அவர் சின்னவெங்காய உற்பத்தி தொடர்பான தரவுகளை எம்மிடம் கேட்டார்.
நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தரவுகளை அமைச்சர் கேட்கிறார் என nரிவித்தோம்.இதற்கு அவர்கள் தம்மடம் தரவுகள் இல்லை என பதிலளித்துள்ளனர்.
இந்த அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. எமக்கு காப்புறுத் திட்டத்தை பெற்று தருவதற்கு இவர்களுக்கு விருப்பம் இல்லையா என்ற கேள்வி எங்களிடம் எழுகிறது.
இந்நிலையில், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவஸ்ரீ சின்ன வெங்காயம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.















