-தையிட்டி தாக்குதல் அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது-
-பேச முடியாத என்.பி.பி எம்.பிக்கள் பதவி விலகுங்கள்-
-அநுர அரசுக்கு வாக்களித்தோர் தலைகுனிய வேண்டும்-
-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் காட்டம்-
-சொ.வர்ணன்-
தையிட்டியில் கட்டவிழ்த்து விடப்பட்டது அரச பயங்கரவாதம். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் தலைகுனிய வேண்டும். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் லகிதரன் ஆவேசம்.
தையிட்டியில் இடம்பெற்ற காணி உரிமைக்கான ஜனநாயக போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியமை அநுர அரசின் அரச பயங்கரவாத செயற்பாடு என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் லகிதரன் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை நண்பகல் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக நீதி கேட்டு ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற கவனயீர்ப்பு கண்டனப் போராட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எந்த ஒரு சிங்கள கட்சி சார்ந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டாம் என கோரிக்கை முன்வைத்தது.
ஆனால் யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் சிலர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரை அமைத்தனர்.
சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராடும் மக்களை அனுர அரசு பயங்கரவாதிகள் போல் பொலிஸாரை வைத்து அடக்குகின்றனர்.
அனுர அரசு தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல தந்திரோபாயங்களை வகுத்து வாக்குகளை பெற்றார்கள். வாக்களித்த தமிழ் மக்களும் நம்பி ஏமாந்து விட்டார்கள்.
வடக்கு மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறோம்.
தையிட்டியில் ஜனநாயக நீதியில் போராடியவர்கள் மீது பொலிஸார் வன்முறைகளை பிரயோகித்து அடக்கிய மைக்கு எதிராக உங்களால் பேச முடியாவிட்டால் பதவியில் இருந்து விலகுங்கள். யாழ்.பண்ணையில் ஆட்டோ பவனி வருவதற்கு தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்குப் போடவில்லை என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழர்களின் காணிகளை அபகரித்து பௌத்த, சிங்கள் பேரினவாதத்தை நாடுபூராக பரப்புவதற்கும், ஒற்றையாட்சி அரசிலை நிலை நிறுத்துவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றனர்.
தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது இருந்தும் பொதுவான பிரச்சனைகளில் தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து குரல் கொடுப்பது வரவேற்கத்தக்கது.
எமது இனத்திற்கான உரிமை நாமே போராடிப் பெற வேண்டும். அதிலும் எமது நிலங்களை பாதுகாக்கத் தவறின் தமிழின இருப்பே அழிக்கப்படும்.
ஆகவே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒற்றுமையாக எமது நிலத்துக்கான போராட்டங்களில் அணி திரள வேண்டும் என தெரிவித்தார்.


















