-தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்-
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில், ஒரு ஆவணமென்றை தயாரித்து முன்வைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியும் தீர்மானித்துள்ளது.
இதில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என நாம் விரும்புவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான சந்திப்பு யாழ்.நகரில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றதையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்:
இச்சந்திப்பின் போது கடந்த தடவை இரு கட்சிகளுக்கும் சந்தித்து பேசிய சில விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டன. இதையடுத்து அண்மைக் காலமாக பதிய அரசியலமைப்பு தொடர்பில் சில ஆயத்தங்கள் இடம்பெறுவதாக அரசாங்க தரப்பினர் கூறிவருகின்றனர். இது எவ்வளவு தூரத்திற்கு உண்மையானது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய யோசனைகளை முன்வைப்பதற்குஒரு ஆவணமொன்றை தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு இன்றைய கூட்டத்தில் நாம் முடிவெடுத்துள்ளோம்.
இதன் பிரகாரம், இரு கட்சிகளும் இணைந்து இந்த ஆவணம் தயாரிக்கும் பணியினை மேற்கொள்ளவுள்ளது. இதில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என நாம் விரும்புகிறோம்.
தமிழ் தேசத்தினுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
ஏற்கனவே அரசாங்கம் சாட்டுப் போக்கு சொல்லாமல் இருப்பதற்கும் சர்வதேசத்துக்கு நேரடியாகவும் இதுதான் தமிழ் மக்களின் ஆவல் ஆசைகள் என்று சொல்லக்கூடிய வகையிலும் பல வரைவுகள் யோசனைகள் ஆவணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எல்லாம் பார்த்து ஒரு குறித்த நிலைப்பாட்டை முன் வைப்பதற்கான ஒரு முயற்சி ஒன்றை நாங்கள் ஆரம்பிக்கிறோம். வெகுவிரைவில் அதனை பூர்த்தி செய்வோம். மற்றவர்களும் இணைந்து தங்கள் நிலைப்பாடுகளை தெரியப்படுத்தினால் நல்லது என்றார்.


















