-வழக்கு விசாரணை CIDக்கு மாற்றம்-
-சொ.வர்ணன்-
யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அல்லைப்பிட்டியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்தபோது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத் தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னிலையாகி, சிறுவனின் கொலை தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி, வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இதன்போது சிரேஷ;ட சட்டத்தரணி குருபரன் தனது சமர்ப்பணத்தில் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவன் தொடர்பான புலன் விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை. அதில் பல சந்தேகங்கள் உள்ளதாக மன்றுக்கு சுட்டிக்காட்டியிருந்தார். 10.02.2026ம் திகதி யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி குறித்த சிறுவன் மீதான துப்பாக்கி சூடு தற்பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டதாக (பி) அறிக்கையில் குறிப்பிட்டதன் ஊடாக முடிவு ஒன்றை கண்டதன் பின்னர் தொடர்ந்து ஆதாரத்தை தேடும் என்ற நம்பிக்கை வைக்க முடியாது. மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியால் பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களான சல்மான் மற்றும் மாரசிங்க ஆகியோரின் துப்பாக்கியில் இருந்துதான் தோட்டாக்கள் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில், குறைந்தபட்சம் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களை கூட சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிட்டு கைது செய்யாமை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இரு பொலிஸ் உத்தியோகஸ்த்த ர்களும் கைது செய்யப்பட்டு விசார ணை மேற்கொள்ளப்படவேண்டும் என மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். சட்டத்தரணி அருள் அருஸ் தனது சமர்ப்பணத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் மீது பாய்ந்த துப்பாக்கி தோட்டா இன்னும் கண்டுபிடிக்கப் படாமை பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வாகனத்தின் முன்பக்க கண்ணாடியால் துளைத்துத் சென்ற துப்பாக்கி தோட்டா வெளியேறிய பகுதியை பொலிசார் இன்னும் அடையாளப் படுத்தவில்லை என மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார். சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் தொடர்பில், பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன.
அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை வழக்கு விசாரணைகளின் போது, பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள், என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னியான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















