-க.சபேஷன்-
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.
இதன் போது பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநரிடம் கண்டுபிடிப்பாளர் விக்டர் எடுத்துரைத்தார்.
அத்துடன் தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை போன்ற காரணங்களால் உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்திய கண்டுபிடிப்பாளர் விக்டர் பல மில்லியன் ரூபாக்களை ஈட்டக்கூடிய வாய்ப்புக்களிருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்த தவறியுள்ளதையும் ஆளுநரிடம் தெரிவித்தார்.
மேலும் இச்சந்திப்பில் தமது தொழிற்முயற்சியின் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்களின் ஊடாக உருவாக்கப்படவுள்ள தொழில்வாய்ப்புக்கள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் நேயமான இந்த உற்பத்திச் செயற்பாட்டின் அவசியம் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறான முயற்சிகள் காலத்தின் தேவையறிந்த செயற்பாடு என வரவேற்ற ஆளுநர், மாகாண சபையூடான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார் .


















