-தி.கஜலக்சன்-
கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த இனவாத மற்றும் மதவாத நிகழ்ச்சி நிரல்களை இந்த அரசாங்கமும் முன்னெடுப்பதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
அநுரகுமார திஸநாயக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பல தடவை வடக்கு,கிழக்குக்கு வந்து சென்ற வேளை தனது ஆட்சியில் இனவாத்ததுக்கு, மதவாதத்துக்கு இடமில்லையென மேடைகளில் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் சிங்கள குடியேற்றத்தினை தமிழர்களது பூர்வீக நிலப்பரப்பில் முன்னெடுக்கும் வகையில் கிவுல் ஓயா திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதன் மூலம் ஜனாதிபதி தன்னுடைய ஆட்சியில் இனவாதம்; இல்லை என்பது பொய்யென்பதை நிரூபித்துள்ளார்.
இதுபோல் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம், வவுனியாவில் பிள்ளையார் கோவில் வளாகத்துக்குள் அமைக்கப்படும் பழைய செங்கட்டிகளை கொண்ட விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு வாய் திறக்காமை போன்ற விடயங்கள் மூலம் ஜனாதிபதி மதவாதத்திற்கு இடமில்லையென்பது பொய்யென்பதை வெளிக்காட்டியுள்ளார்.
கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த இனவாத மற்றும் மதவாத நிகழ்ச்சி நிரல்களை இந்த ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தொடர்கின்றது என்றார்.


















