-த.சுபேசன்-
இராமநாதன் மகளிர் கல்லூரி புல்லும், புதருமாக இடிந்த கட்டிடங்களுடனும் காணப்படுகின்ற நிலையில், லேடி இராமநாதனுக்கு சிலை வைக்கப்பட்டதை அவர் விரும்பியிருக்கமாட்டாரென குறிப்பிட்டுள்ள கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் நடராசா சச்சிதானந்தன் சைவப் பெருமக்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சேர் பொன் இராமநாதன் இலங்கையிலுள்ள சைவப் பெண்களை கருத்தில் கொண்டு உருவாக்கிய கல்லூரியே இராமநாதன் மகளிர் கல்லூரியாகும். இந்த கல்லூரிக்காக இராமநாதன் தனது பெருந்தொகையான காணிகளை விட்டுச் சென்றுள்ளார்.
ஒரு காலத்தில் இந்த கல்லூரியில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மாணவியர்கள் வந்து கல்லூரி விடுதிகளில் தங்கி படித்துள்ளனர். லேடி இராமநாதன் ஒரு ஆங்கிலேயராக இருந்த போதிலும் அவர் தன்னை சைவசமயத்திற்கு மாற்றி கல்லூரிக்கும்-சைவத்தமிழுக்கும் அளப்பரிய சேவையினை ஆற்றியிருந்தார்.
தற்சமயம் கல்லூரிக்கு பலவிதமான தேவைகள் உண்டு. கல்லூரி புல்லும் புதருமாக இடிந்த கட்டிடங்களுடனும் காணப்படுகின்றது.
இந்நிலையில் அண்மையில் லேடி இராமநாதன் அவர்களுக்கு 7 இலட்சம் ரூபாய் செலவில் சிலை எழுப்பப்பட்டுள்ளது. கல்லூரி இருக்கும் நிலையில் தனக்கு சிலை நிறுவப்பட்டதை லேடி இராமநாதன் விரும்பியிருக்கமாட்டார். சைவப் பெருமக்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


















