யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
டச்சுவீதி – உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணுக்கு வயிற்றுவலி காரணமாக கடந்த 19 ஆம் திகதி வயிற்றில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு வயிற்றில் ஒரு குழாய் வைக்கப்பட்டது.
அந்தக் குழாயினை அகற்றுவதற்காக கடந்த 24ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மறுநாள் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் சத்திர சிகிச்சை நிறைவில் குறித்த இளம்தாய் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சாட்சிகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டனர்.
இரத்த நாளங்களுக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டு, இரத்தப் போக்கினால் மரணம் ஏற்பட்டதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















