-சொ.வர்ணன்-
இழப்புகளுக்கோ, தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என சுட்டிக்காடிய முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி எழுப்புகின்ற வரலாற்று பயணத்தை நாம் சரியாக முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலம் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:
தமிழ் மக்களின் எதிர்கால நடவடிக்கைகளின் மிகக் காத்திருமான பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாளில் இன்று நாங்கள் எல்லோரும் கலந்து கொண்டிருக்கிறோம்.
எமது அரசியல் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக அல்லது அதனுடைய வகிபாகம் தொடர்பாக பலரும் பலவிதமாக கருத்துக்கள் சொல்ல முடியும். ஒரு பலவீனமான அமைப்பாக எமது அமைப்பை எங்களுடைய கட்சியை பலரும் விமர்சிக்கக்கூடும். ஆனால் தமிழ் மக்கள் கூட்டணி தான் தமிழ் மக்களுடைய எதிர்காலம் என்கின்ற அசைக்க முடியாத செய்தியை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன்.
2009 ஆம் ஆண்டு வரை தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்து ஒப்பற்ற தியாகங்களை புரிந்து இந்த மண்ணின் எழுச்சிக்காக, தமிழ் மக்களுடைய உரிமைக்காக களமாடி மடிந்த அத்தனை உயிர்களின் ஆத்மாக்கள் மீது சத்தியம் செய்தவர்களாக நாங்கள் எங்களுடைய பயணத்தை, எங்களுடைய அரசியல் இயக்கத்தை, எங்களுடைய அரசியல் கட்சியை நாங்கள் முன்னோக்கி நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த இலட்சியத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடப்போவதில்லை.
இலங்கைத்தீவில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை எமது அரசியல் இயக்கத்தின் தொடர்ச்சியான போராட்டம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது.
இந்த மண்ணில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இந்த மண்ணில் நிலைக்கொண்டிருக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி எழுப்புகின்ற வரலாற்று பயணத்தை சரியாக மேற்கொள்ளவில்லை.
இந்த இடைவெளியை எமது கட்சி நிச்சயமாக நிரப்பும். தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி எழுப்புகின்ற வரலாற்று பயணத்தை நாம் செய்து காட்டுவோம்.
அந்த வகையிலே நாங்கள் இழப்புகளுக்கோ அல்லது தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக ஒதுங்கி போகப்போகமாட்டோம். தமிழ் தேசியத்தின் எழுச்சி பயணத்தில் அணி திரண்டு பயணிக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்றார்.


















